×

டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது: மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

டெல்லி: டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி அவைக்கு வருவதையே தவிர்த்து வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமரை விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 11வது நாளாக பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவை நடவடிக்கைகள் 2 மணிக்கு மீண்டும் தொடங்கிய நிலையில் மக்களவையில் மசோதாக்கள் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. கெஜ்ரிவால் அரசு மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து சச்சரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

யூனியன் பிரதேசம் தொடர்பான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக கெஜ்ரிவால் அரசின் ஊழலுக்கு துணை போகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தாலும் மீண்டும் மோடி அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்.

The post டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்தை இயற்றும் உரிமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது: மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Home Minister ,Amitsha ,Delhi ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...